கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பல மாற்றத்திற்கான திட்டங்களை ஒவ்வொரு துறைகளிலும் ஏற்படுத்தி வருகிறது. தற்போது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சீருடை கலர் ஒன்றாக இருந்து வரும் நிலையில், பாலினம் வேறுபாடு இல்லாமல் அதை பேன்ட் & சட்டை என பொதுச் சீருடையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் மாணவர்கள் அணியும் பேன்ட் & சட்டையை இனி மாணவிகளும் அணிய வேண்டும்.
கோழிக்கோடு பாலுச்சேரியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இந்த சீருடை அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் ப்ளஸ்-1 பிரிவில் 60 மாணவர்களும் 260 மாணவிகளும் படித்து வரும் நிலையில் இந்த ஆண்டு அந்த மாணவ மாணவிகளுக்கு மட்டும் இந்த சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சீருடையை அறிமுகப்படுத்தி வைத்த அமைச்சர் பிந்து கூறும் போது, “சமூக மாற்றத்திற்கான முதல் படி பள்ளிக்கூடத்தில் இருந்துதான் தொடங்குகிறது. அந்த வகையில் பாலினம் வேறுபாடு இல்லாமல் அறிமுகப்படுத்தபட்டிருக்கும் இந்த சீருடைக்கு எதிர்ப்புகள் இருந்தாலும் அதன் நன்மைகள் தெரியவரும் போது எதிர்ப்பவர்களும் ஆதரிப்பார்கள். இளைய தலைமுறையினர் மூலம் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தும் போது அதை எதிர்க்கிற ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் சமாளித்துப் படிப்படியாக மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் இந்த பொதுச்சீருடை கொண்டு வரப்படும்.
நாட்டிலே முதல் முறையாக பாலுச்சேரி அரசு பள்ளியில் இந்த பொதுச்சீருடை கொண்டு வரப்பட்டிருப்பது பெருமைப் பட வேண்டிய விஷயம். இந்த பொதுச்சீருடை பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவாகும்” என்றார்.
இந்த பொதுச்சீருடைக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருக்கிற நிலையில் நடிகை ரீமா கல்லிங்கல் மற்றும் காவல் துறையில் ஆண்களை போன்று பெண்களுக்கும் பொதுச்சீருடை வேண்டும் என்று கேரளாவில் முதலில் போராடி வெற்றி கண்ட திருச்சூர் மகளீர் எஸ்.ஐ. விநயா ஆகியோர் முகநூலில் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.