சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்னும் பல இடங்களில் மாவோயிஸ்டுகளின் அராஜகம் அதிகமாகவே இருந்து வருகிறது. அங்கு சுக்மா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் வெட்டி ராமா. இவர் போலீஸாக பணிபுரிந்து வருகிறார். அண்மையில், அந்த பகுதியில் மவோயிஸ்டுகளுக்கும் போலீஸ்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
அப்போது வெட்டி ராமாவுக்கு எதிராக நின்ற மாவோயிஸ்டுகளில் ஒருவராக அவரது தங்கை வெட்டி கன்னியும் நின்று சண்டையிட்டுள்ளார். அந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். வெட்டி ராமாவின் தங்கை வெட்டி கன்னி தப்பித்து மீண்டும் காட்டுக்குள் பதுங்கிவிட்டார்.
ஒரு காலத்தில் வெட்டி ராமாவும் மாவோயிஸ்டாக இருந்தவர்தானாம், அதனை அடுத்து அவருக்கு திருமணம் நடைபெற்றது. இதன்பின் ஆயுதங்களுடன் போலீஸிடம் சரணடைந்துள்ளார். அதன் பின் போலீஸாக மாறியிருக்கிறார். ஆனால், அவரது தங்கை இன்றுவரை மாவோயிஸ்ட்டாகவே தினசரி போராட்ட வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “என் தங்கை கன்னியை நான் பலமுறை திரும்ப வந்துவிடுமாறு கடிதம் எழுதி அனுப்பினேன். ஆனால், இன்னும் வந்தபாடில்லை. தொடர்ந்து மாவோயிஸ்டாக தன் வாழ்க்கையை போராட்டமாகவே நடத்திக் கொண்டிருக்கிறாள். என் எதிரில் நின்று ஒரு மாவோயிஸ்டாக செயல்பட்டபோது எனக்கு கடினமாகவே இருந்தது. இது மிகுந்த மனவேதனையாக உள்ளது” என்றார்.