லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் மற்றும் ஜேஇஇ ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ததை சுட்டிக்காட்டி, மாணவர்கள் தேர்வுகளை எழுத ஆர்வமாக இருக்கிறார்கள் என மத்திய அமைச்சர் கூறியது பற்றி ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கருத்து தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டுகளும் அண்மையில் வெளியிடப்பட்டன. ஆனால் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் மற்றும் ஜேஇஇ ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ததை சுட்டிக்காட்டி, மாணவர்கள் தேர்வுகளை எழுத ஆர்வமாக இருக்கிறார்கள் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் அண்மையில் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசியுள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், "லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துள்ளதாக மத்திய அரசு வாதம் செய்கிறது. இதனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. யாராவது ஆயுள் காப்பீடு பெற்றால் அவர்கள் விரைவில் இறக்க போகிறார்கள் என அர்த்தமா, மத்திய அரசு ஏன் விடாப்பிடியாக இருக்கிறது என்று தெரியவில்லை.’’ எனத் தெரிவித்துள்ளார்.