
ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச மாவட்டத்தில் சந்துவா காவல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த காவல் நிலையத்தில், தனது தந்தையின் தலையோடு 40 வயதுமிக்க நபர் ஒருவர் சரண் அடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், பைதர் சிங் (70) என்பவரிடம் குற்றம் சாட்டப்பட்ட நபர் போதைப் பொருளான குட்கா வாங்குவதற்காக ரூ.10 கேட்டுள்ளார். அந்த பணத்தை பைதர் சிங் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த குற்றம் சாட்டப்பட்ட நபர், தனது தந்தை பைதர் சிங்கின் தலையை கூர்மையான ஆயுதத்தால் துண்டித்து கொலை செய்துள்ளார். இதனை கண்ட, அவரது தாயார் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்.
இந்த நிலையில் தான், குற்றம் சாட்டப்பட்ட நபர் போலீசில் சரணடைந்தார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.10 கொடுக்காததால் தனது தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.