இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுகிழமை (12.09.2021) நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முன்னரே நீட் தேர்வு வினாத்தாள் வெளியாகிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக மறுத்தது. இந்தநிலையில் நீட் தேர்வு வினாத்தாள் வெளியானது தொடர்பாக நீட் தேர்வு எழுதிய மாணவி, அவரது மாமா உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள நீட் தேர்வு மையத்தில், மாணவர்களுக்கு சிலர் உதவப்போவதாகவும், ஒரு மாணவருக்கு உதவ ஒரு கும்பல் 35 லட்சம் கேட்பதாகவும் ராஜஸ்தான் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து ராஜஸ்தான் காவல்துறையினர், நீட் தேர்வு மையத்தில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அதில், தேர்வு அறை கண்காணிப்பாளர் ராம் சிங், தேர்வு மைய நிர்வாக பிரிவின் பொறுப்பாளர் முகேஷ் ஆகியோர் நீட் வினாத்தாளை புகைப்படம் எடுத்து வெளியாட்களுக்கு அனுப்பி, அவர்களிடமிருந்து பதில்களைப் பெற்று தனேஸ்வரி யாதவ் என்ற மாணவிக்கு உதவியது தெரியவந்தது.
இதனையடுத்து மாணவி தனேஸ்வரி யாதவ், முறைகேட்டிற்கு ஏற்பாடு செய்த மாணவியின் மாமா சுனில் குமார் யாதவ், தேர்வு அறை கண்காணிப்பாளர் ராம் சிங், தேர்வு மைய நிர்வாக பிரிவின் பொறுப்பாளர் முகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய தனியார் பயிற்சி மைய உரிமையாளர் நவரதன் சுவாமி, வினாக்களுக்கு விடையைத் தயார் செய்த அனில் யாதவ் மற்றும் சந்தீப், விடைகளை தேர்வு அறை கண்காணிப்பாளர் ராம் சிங்கிற்கு அனுப்பிய பங்கஜ் யாதவ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.