வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்றுள்ளது.
வங்கக் கடலில் கடந்த ஆறாம் தேதி உருவாகிய மேலடுக்கு சுழற்சியானது தொடர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது. அந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் எனக் கூறப்பட்டது. இது மேலும் வடக்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. பத்தாம் தேதி (இன்று) புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இதனுடைய பாதை வடமேற்கு திசையிலிருந்து வடக்கு - வடகிழக்கு திசையில் கொஞ்சம் கொஞ்சமாக நகரத் தொடங்கி வங்கதேசம் - மியான்மர் கடற்கரையை நோக்கி புயல் நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் இந்த வருடத்தில் உருவாக இருக்கும் இந்த முதல் புயலுக்கு 'மோக்கா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயர் ஏமன் நாட்டால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்திலிருந்து 1,460 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாழ்வு மண்டலம் 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று மாலை இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.