முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரு வாரங்களுக்கு முன்னர் பிரணாப் முகர்ஜி (84) மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றபோது, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார். இந்நிலையில், அவருக்கு மூளையிலிருந்த ரத்த உறைவு காரணமாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக ஏற்கனவே வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைபெற்று வந்த அவருக்கு, இராணுவத்தின் ஆர் அண்ட் டி மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பிரணாப் முகர்ஜி நினைவிழந்து ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாகவும், நுரையீரல் தொற்று, சிறுநீரக செயலிழப்பு ஆகியவையும் அவருக்கு ஏற்பட்டிருப்பதால் அதற்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்திருந்தது. இந்த சூழலில் மருத்துவமனை வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ள தகவலின்படி, நேற்று முதல் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், நுரையீரல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ நிபுணர்கள் குழு அவரை கவனித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.