மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்து வந்தார். இந்நிலையில், சிவசேனாவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அணி திரண்டு உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகச் செயல்பட்டனர்.
இதையடுத்து, சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் அதற்கு முன்னதாகவே தனது முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதையடுத்து, பா.ஜ.க.வின் ஆதரவுடன் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சிவசேனா கட்சியும் சின்னமும் ஏக்நாத் ஷிண்டே வசமானது.
இந்நிலையில், தெற்கு மும்பையில் உள்ள ஒய்.பி.சவான் மண்டபத்தில் அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது அஜித்பவாருடன் தனது ஆதரவு அமைச்சர்களான ஹசன் முஷ்ரிப், சகன் புஜ்பால், அதிதி தட்கரே, திலீப் வல்சே பாட்டீல் மற்றும் எம்.பி பிரபுல் பட்டேல் ஆகியோரும் சந்தித்துப் பேசினார்கள்.
இந்த நிலையில், அஜித் பவார், பிரபுல் படேல் ஆகியோர் நேற்று மீண்டும் சரத் பவாரை ஒய்.பி.சவான் மண்டபத்தில் சந்தித்தனர். சரத்பவாரை சந்தித்த பின் பிரபுல் பட்டேல் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அதில், ‘கட்சியின் ஒற்றுமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி சரத்பவாரிடம் வலியுறுத்தினோம். மேலும், இன்று டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தானும், அஜித் பவாரும் கலந்து கொள்வதாக’ கூறினார். சரத்பவாரை அஜித்பவார் பிரிந்து சென்ற பிறகு சரத்பவாரை சந்திப்பது இது மூன்றாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.