சபரிமலை ஐயப்பன கோயிலில் வழங்கப்படும் அரவணை பாயசத்தை அழிப்பதற்கான டெண்டர் அறிவிப்பை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழங்கப்படும் அரவணை பாயசம் பக்தர்கள் மத்தியில் புகழ்பெற்றது. இந்த பிரசாதத்தில் சேர்க்கப்படும் ஏலக்காயில் பூச்சுக்கொல்லி பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. ஏலக்காய் விளைச்சலின் போது பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது. இதனால் இந்த ஏலக்காய்களை அரவணை பாயசம் பிரசாதத்தில் சேர்க்கப்படுவதால் இதனை உண்ணுபவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆய்வு செய்து தெரிவித்திருந்தது. மேலும் பூச்சிக்கொல்லி கலந்த ஏலக்காய் விதைகள் அடங்கிய பாயசத்தை விநியோகிக்கக் கூடாது என்று தேவஸ்தான வாரியத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் 6 லட்சத்து 65 ஆயிரத்து 127 அரவணை பாயச கேன்களை அழிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு டெண்டர் வெளியிட்டுள்ளது. அதில், “சபரிமலை பகுதியில் அரவணை பாயச கேன்களை காடுகளில் வசிக்கும் யானைகள் விரும்பி உண்ணும் என்பதால் இந்த அரவணை பாயச கேன்களை பம்பைக்கு வெளியே கொண்டு சென்று அறிவியல் பூர்வமாக அழிக்க வேண்டும். ஐயப்பன் உருவம் பொறித்த அரவணை பாயச கேன்களின் பாகங்களை அழிப்பது பக்தர்களை புண்படுத்தும் என்பதால் அவற்றை பொதுவெளியில் அழிக்கக் கூடாது.
மேலும் அரவணை பாயச கேன்களை அகற்றும் இடத்தில் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறச் சூழல்களை முறையாக பின்பற்ற வேண்டும். அரவணை பாயச கேன்கள் காலாவதி ஆகிவிட்டால் அவற்றைப் பாதுகாப்பாக கையாள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அழிக்கப்பட உள்ள 6 லட்சத்து 65 ஆயிரத்து 127 அரவணை பாயச கேன்களின் மொத்த மதிப்பு ரூ.5.3 கோடி ஆகும்.