புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை நீக்கி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று (16.02.2021) உத்தரவிட்டார். மேலும், தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்திரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என்றும் குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, நாளை (18/02/2021) புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்கிறார். புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகையில் நாளை (18/02/2021) காலை 09.00 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.
இந்த நிலையில் புதுச்சேரி விமான நிலையம் வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பா.ஜ.க.வினர் மலர்த்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சட்டவிதிகளுக்குட்பட்டு செயல்படுவேன்; அதில் மாற்றுக் கருத்து இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி புதுச்சேரிக்கு ஆளுநராக வந்துள்ளேன். புதுச்சேரி மக்களை நேசிக்கிறேன்; மக்களுக்கான ஆளுநராகச் செயல்படுவேன். பாரதி வாழ்ந்த புதுச்சேரி மண்ணுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது" எனத் தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சென்ற ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சாமி தரிசனம் செய்தார். அங்கு ஆளுநருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் பூரணக்கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது.