ஒடிசா மாநிலம் ஜாரிகாவோன் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்ற 70 வயது மூதாட்டி தனது முதியோர் பென்ஷனை வாங்க வங்கிக்கு செல்வதற்காக, அடிப்பட்ட காலோடு செருப்பு இல்லாமல் உடைந்த நாற்காலியின் உதவியுடன் நீண்ட தூரம் நடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்த தகவல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கவனத்திற்கு சென்றதையடுத்து, அந்த 70 வயது மூதாட்டிக்கு உதவுமாறு சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு உத்தரவிட்டு, அதனைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்திலும் பகிர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை, மூதாட்டி சூர்யாவை அழைத்து அவரது பென்ஷன் தொகையை பணமாக கொடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக அந்த வங்கி கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில், மூதாட்டி சூர்யாவின் வீடியோவை பார்த்து மிகுந்த மனவேதனை அடைந்தோம். அவர், தனது பென்ஷன் பணத்தை மாதந்தோறும் அதனு கிராமத்தில் உள்ள வங்கியின் சிஎஸ்பி பிரிவில் பெற்று வந்தார். ஆனால் மூதாட்டியின் வயது மூப்பின் காரணமாக அவரது கட்டை விரல் ரேகை சரிவர ஒத்துப்போகவில்லை என்பதால் உறவினர் ஒருவருடன் ஜாரிகாவோன் கிளைக்கு நடந்து வந்துள்ளார். சம்பந்தப்பட்ட வங்கியின் மேலாளர், மூதாட்டி சூர்யாவுக்கு தேவையான உதவிகளை வழங்கியதோடு, அடுத்த மாதம் முதல் மூதாட்டியின் வீட்டிற்கே சென்று பென்ஷன் தொகை வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.