விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் வரும் 2021 டிசம்பரில் நிறைவேற்றப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், 'விண்வெளி ஆய்வில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது. கடந்த 2008-ல் சந்திராயன்-1 செயற்கைக் கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அது நிலவின் நிலப்பரப்பை ஆய்வுசெய்து பல தகவல்களை அனுப்பியது. இதன் அடுத்தகட்டமாக சந்திராயன் 2 செயற்கைக்கோளை ஏவும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில முக்கியமான சோதனைகளை செய்து முடிக்க வேண்டியுள்ளதால் அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரலில் இதனை ஏவ திட்டமிட்டுள்ளோம். இது இஸ்ரோவின் மிக முக்கிய சாதனையாக அமையும். இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு முதல்முறையாக மனிதனை அனுப்பும் திட்டத்துக்கு ககன்யான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ககன்யான் திட்டத்தின் பங்குபெறும் வீரர்களுக்கு முதல்கட்ட பயிற்சி இந்தியாவிலும் பிறகு உயர்நிலை பயிற்சி ரஷ்யாவிலும் அளிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் முதல் ஆளில்லா விண்கலம் 2020 டிசம்பரிலும், இரண்டாவது ஆளில்லா விண்கலம் 2021 ஜூலையிலும் விண்ணில் ஏவப்பட உள்ளது. பிறகு 2021 டிசம்பரில் விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் திட்டம் நிறைவேற்றப்படும்' என கூறினார்.