மத்தியப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் வருவாய்த் துறை அமைச்சரான கரண் சிங் வர்மா தற்போது இச்சாவர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார். பா.ஜ.க.வைச் சேர்ந்த இவர் இச்சாவரில் உள்ள தேநீர்க்கடை ஒன்றில் 2018 ஆம் ஆண்டு முதல் பணம் கொடுக்காமல் தேநீர் சாப்பிட்டு வந்துள்ளார்.
கடன் தொகை ரூபாய் 30,000-ஐ எட்டியும், திருப்பித் தராததால், தேநீர்க்கடை உரிமையாளர் சட்டமன்ற உறுப்பினர் கரண் சிங் வர்மா மீது அதிருப்தியில் இருந்துள்ளார். கடனை எப்படி வசூலிப்பது என்று தெரியாமல் இருந்த தேநீர்க்கடை உரிமையாளர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதிக்கு செல்லும் போது நடுரோட்டில் காரை வழிமறித்து கடனைக் கேட்டுள்ளார்.
தொகுதி மக்கள் எதிரே இப்படிக் கடனைக் கேட்டதால் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கரண் சிங் வர்மா தர்மசங்கடத்துக்கு உள்ளானார். இதையடுத்து, விரைவில் அந்தக் கடனைத் திருப்பித் தருவதாக டீக்கடை உரிமையாளரிடம் கரண் சிங் வர்மா உறுதி அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இச்சாவர் தொகுதி அமைந்துள்ள சீஹோர் மாவட்டம் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் சொந்த மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.