மத்திய பிரதேசத்தில் 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தவறுதலாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு கேட்டுள்ளார் ஜோதிராதித்ய சிந்தியா.
மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் அம்மாநிலத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அந்தவகையில், குவாலியர் மாவட்டம், தப்ரா நகரில் பாஜக வேட்பாளர் இமர்தி தேவியை ஆதரித்து அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா பிரச்சாரம் செய்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், "எனதருமை மக்களே வரும் 3-ம் தேதி நடைபெறும் தேர்தலில் கை சின்னத்துக்கு எதிரே உள்ள பொத்தானை நீங்கள் அழுத்த வேண்டும்” என்றார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அண்மையில் பாஜகவுக்கு மாறிய நிலையில், ஆண்டாண்டு காலமாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு கேட்டுவந்த பழக்கத்தில் தற்போதும் காங்கிரஸ்க்கு வாக்களிக்க கோரினார். இருப்பினும் இதனைக் கூறியவுடன் சற்று சுதாரித்துக்கொண்ட அவர், “தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்" எனத் திருத்தி கூறினார். இதனை கிண்டல் செய்யும் வகையில் மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பதிவில், “சிந்தியாஜி, வரும் 3-ம் தேதி மத்தியப்பிரதேச மக்கள் நீங்கள் கூறியபடி காங்கிரஸ் சின்னத்துக்கு வாக்களிப்பார்கள்” எனக் கூறியுள்ளது.