உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் கோவா மாநிலத்தைச் சேர்ந்த கோவா ஃபார்வேர்டு கட்சி காங்கிரஸோடு கைகோர்த்துள்ளது. இரு கட்சிகளிடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று கோவா ஃபார்வேர்டு கட்சி தலைவர் விஜய் சர்தேசாயை தனது கட்சியினருடன் ராகுல் காந்தியைச் சந்தித்துள்ளார்.
இந்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள கோவா ஃபார்வேர்டு கட்சி, அதற்கு 'டீம் கோவா' என தலைப்பிட்டுள்ளது. விஜய் சர்தேசாயின் கோவா ஃபார்வேர்டு கட்சி சிறிய கட்சி என்றாலும், கோவா அரசியலில் முக்கிய பங்காற்றிவருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் 17 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 13 இடங்களில் மட்டுமே வென்றது. ஆயினும் பாஜக கோவா ஃபார்வேர்டு கட்சி போன்ற சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசில் விஜய் சர்தேசாய் துணை முதல்வராகவும் இருந்தார்.
அதன்பின்னர் மனோகர் பாரிக்கர் மறைவுக்குப் பின்னர் பிறகு, 10 காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் பாஜகவில் இணைந்து பாஜகவின் பலத்தை அதிகரித்தனர். இதனையடுத்து விஜய் சர்தேசாய் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். இருப்பினும், தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து வந்த கோவா ஃபார்வேர்டு கட்சி, கடந்த ஏப்ரலில் கூட்டணியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அண்மையில், கோவா ஃபார்வேர்டு கட்சியை, கோவா திரிணாமூல் கட்சியோடு இணைக்குமாறு பிரசாந்த் கிஷோர் அக்கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாயிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் விஜய் சர்தேசாய் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனைத்தொடர்ந்து கோவா வந்த மம்தா, தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக விஜய் சர்தேசாயிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச்சூழலில், சில தினங்களுக்கு முன்னர் கோவா ஃபார்வேர்டு கட்சியின் செயல் தலைவரையும், சில நிர்வாகிகளையும் திரிணாமூல் கட்சி தங்கள் பக்கம் இழுத்து அதிர்ச்சியளித்தது. இந்தச்சூழலில் கோவாஃபார்வேர்டு கட்சி காங்கிரஸோடு கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.