Skip to main content

“மசோதா வந்தால் அதை அலசி ஆராய ஆளுநர்களுக்கு கால அவகாசம் தேவை” -  தமிழிசை செளந்தரராஜன் 

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

tamizhisai soundararajan said Governors need time to scrutinize the bill if it comes

 

புதுச்சேரி கோரிமேட்டிலுள்ள மதர் தெரசா பட்ட மேற்படிப்பு மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒய்-20 நிகழ்ச்சி நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு நிகழ்வை தொடங்கி வைத்தார். பின்னர் அவரிடம் செய்தியாளர்கள், ‘மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவர் தகுந்த அறிவுரை வழங்க வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிடக் கோரி பா.ஜ.க அல்லாத மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளது’ குறித்து கேள்வி எழுப்பினர்.

 

அதற்கு பதிலளித்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “மசோதாவிற்கு ஒப்புதல் தர காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என முதலமைச்சர் கடிதம் எழுதுவது அவரது உரிமை. நான் அதை கவர்னராகத்தான் பார்க்கின்றேன். என்னை பொறுத்தவரை மசோதா வந்தால் கால நிர்ணயம் செய்து, கலந்தாலோசித்து கால அவகாசம் எவ்வளவு தேவையோ அவ்வளவு எடுத்துக்கொள்வேன். சட்ட நுணுக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும். நீதிமன்றங்களில் உடனடியாக தீர்ப்பு சொல்ல முடியாது. ஆகவே தவறான முன் உதாரணமாக ஆகிவிடக்கூடாது. அலசி ஆராய்ந்து அதை பார்க்க வேண்டும். சில மசோதாக்களுக்கு பொதுமக்களிடமிருந்து சில கோரிக்கைகள் வருகின்றன. எதிர்க்கட்சிகளிடமிருந்து சில கோரிக்கைகள் வருகின்றன. இவைகளை பார்த்துத்தான் செயல்படுகின்றேன்.

 

இது நான் பொறுப்பு வகிக்கும் மாநிலத்தில், நான் எடுக்கும் முறையைத்தான் சொல்கின்றேன். முதலமைச்சர் கடிதம் எழுதுகின்றார்கள். இதற்கு முன்பாக எதிர்க்கட்சியாக இருக்கும்போது அவர்கள் ஆளுநர்களை பார்த்தவர்கள். அப்போது கருத்து சொல்லவில்லை. இப்போது பேசுகின்றார்கள்" எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “ஸ்மார்ட் சிட்டி குறித்து தவறான கருத்துக்கள் வெளியே கொண்டு வரப்படுகிறது. அதனை விரைவுப்படுத்தவது சம்பந்தமாகவும், வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரச்சனை ஏற்பட்டதாக கேள்விப்பட்டேன். அதற்காக சுகாதாரத்துறை செயலருடன் எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் எவ்வாறு பணியாற்ற வேண்டும்; எப்படி பணியாற்றுகிறார்கள்; எவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கொண்டுவர வேண்டும் என்பது தொடர்பாகவும் கூட்டம் போட்டுள்ளோம்.

 

பயிர் காப்பீட்டு திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சிறிய மாநிலங்கள் பிரிவில் புதுச்சேரிக்கு முதல் விருது கிடைத்துள்ளது. இதற்காக வேளாண்துறை அதிகாரிகளுக்கு எனது பாராட்டுக்கள். வரும் 25-ஆம் தேதி இங்குள்ள விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக துணைநிலை ஆளுநர்களுக்கான கூட்டம் டெல்லியில் நடைபெற இருக்கிறது. அதில் நான் கலந்து கொள்கிறேன்"  என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்