புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச யோகா திருவிழா ஜனவரி மாதம் முதல் வாரம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 28-வது சர்வதேச யோகா திருவிழா கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் தொடங்கியது. விழாவில் புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், "யோகா கலை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக சரித்திரம் சொல்கிறது. நாகரிகம் என்ன என்பதற்கு முன்பே இந்தியாவில் யோகா பயிற்சி செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. நம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான கோவில்களில் நிறுவப்பட்டுள்ள இறைவன் அமர்ந்திருப்பது யோகா நிலையில் தான் இருக்கும். இதனால் தான் இறைவனையும் யோகாவையும் பிரிக்க முடியாது என்று சரித்திரம் சொல்கிறது. இஸ்லாமிய நாடுகள் கூட யோகா தினத்தைக் கொண்டாடுகிறார்கள் என்றால் அதுதான் நமது பெருமை. இயற்கை மருத்துவத்தை விட யோகா சிறந்தது. நோய்கள் எல்லாவற்றிற்கும் தீர்வு உள்ளது என்று கூறுகின்றனர். சரியாக யோகா செய்து சரியாக உணவு உண்டால் மாரடைப்பு வரவே வராது. நம் நாட்டில் உள்ள நல்லதை நாம் எடுத்துக் கொள்ள மறுக்கிறோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் யோகாவை நாடு முழுவதும் பிரதமர் மோடி கொண்டு சென்றுள்ளார். இதனால் தான் யோகா தினத்தைக் கொண்டாடுகிறோம். புதுச்சேரி அரசு தொடர்ந்து யோகா திருவிழாவை நடத்தி வருகிறது" எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், "யோகா திருவிழாவை புதுச்சேரி அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த கலை இறைவனால் கொடுக்கப்பட்ட கலை. உலக முழுவதும் பரந்து கிடக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கற்க வேண்டிய கலை யோகா. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது" என்று பேசினார்.