புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை நீக்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் (16.02.2021) உத்தரவிட்டிருந்த நிலையில், தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகையில் இன்று (18/02/2021) காலை 09.00 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க, புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
புதுச்சேரியில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஏற்கனவே ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததும், கடந்த 16 ஆம் தேதி மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்ததும் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று துணைநிலை ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றுள்ளார்.