
ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று உத்தரபிரதேச அரசு சார்பில் காவலர்களை கௌரவிக்கும் வகையில் டிஜிபி விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகத்தை சேந்த ஐபிஎஸ் அதிகாரி தினேஷ்குமாருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தில் எஸ்.பி ஆக பணியாற்றி வரும் இவர் பெரும் துப்பாக்கி சண்டைக்கு பின் சர்வதேச தீவிரவாதிகளான காலீஸ்தான் அமைப்பினர் மூவரை உயிருடன் கைது செய்தார். கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் பலராலும் பாராட்டப்பட்டது. பிடிபட்ட இந்த மூவரும் பஞ்சாபின் முன்னாள் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், அவரது மகனும் துணை முதல்வருமாக இருந்த சுக்பீர்சிங் பாதலை கொல்ல திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் தமிழக காவலர் தினேஷ்குமாரின் செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனை பாராட்டும் பொருட்டு அவருக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.