மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகியும், மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதனால், அந்த மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திரும்பியுள்ளனர். அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனக்கு துணை முதலமைச்சர் பதவியை வழங்குமாறு கட்சித் தலைமையிடம் கோரியதாகவும், இதற்கு கட்சி தலைமை மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது செல்வாக்கை காட்டும் வகையில், 25 எம்.எல்.ஏ.க்களுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மொத்தம் 285 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் ஆட்சி அமைப்பதற்கு தேவைப்படும் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 143 ஆகும். இதில் மகாராஷ்டிரா விகாஸ் அகாதிக்கு 151 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். குறிப்பாக, சிவசேனாவுக்கு 55 எம்.எல்.ஏ.க்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 52 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 44 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
பா.ஜ.க. கூட்டணிக்கு 119 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 25 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவினால், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி கவிழும் நிலைக்கு தள்ளப்படும்.
இந்த நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளையும், அரசு எதிராக திரும்பியுள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சரிடம் கட்சி மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கூறுகின்றன.
செய்தியாளர்களைச் சந்தித்த மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க. தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், "மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இதுவரை எந்த முன்மொழிவும் வரவில்லை. கட்சியிடம் இருந்தோ, ஏக்நாத் ஷிண்டேவிடம் இருந்தோ எந்த முன்மொழிவும் வரவில்லை. அரசியலில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.