மக்களவைத் தேர்தல் ஒவ்வொரு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, 486 தொகுதிகளில் ஆறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து, மீதமுள்ள 58 தொகுதிகளில் இறுதிக்கட்டமாக வரும் ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதற்கிடையில், ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் கடைசி கட்டத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம், மிர்ஷாபூர் பகுதியில் நேற்று (26-05-24) பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது, “நான் சிறுவயதில் இருக்கும்போது கோப்பைகளையும், தட்டுகளையும் கழுவித்தான் வளர்ந்தேன். நான் தேநீர் பரிமாறி வளர்ந்தவன். எனக்கும் தேநீருக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானது.
இந்தியா கூட்டணி இனவாத மற்றும் ஜாதிவெறி கூட்டணி. இதை நாடு புரிந்து கொண்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்பை மாற்ற முடிவு செய்கிறது.சமாஜ்வாதி கட்சிக்கு தங்கள் வாக்குகளை வீணடிக்க யாரும் விரும்பவில்லை. நீரில் மூழ்கியவருக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். யாருடைய ஆட்சி அமைவது உறுதியாகிறதோ அவர்களுக்குதான் சாமானியர்கள் வாக்களிப்பார்கள்.
இந்தியா கூட்டணியில் உள்ளவர்களை நாடு நன்கு அறிந்திருக்கிறது. அவர்கள் தீவிர சாதிவெறியர்கள். அவர்கள் தீவிர குடும்பவாதிகள். எப்பொழுதெல்லாம் அவர்களின் அரசாங்கம் அமையப் போகிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இந்த அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்கிறார்கள். பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டுகளை கொள்ளையடிக்க இந்தியா கூட்டணியினர் நினைக்கிறார்கள். மத அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று நமது அரசியல் சாசனம் தெளிவாக கூறுகிறது” என்று கூறினார்.