தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த 960 வெளிநாட்டு உறுப்பினர்களின் விசாவை ரத்து செய்வதோடு, அவர்களைக் கருப்புப் பட்டியலில் வைக்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,000-ஐ கடந்துள்ளது. 2,12,018 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் தற்போது வேகமாகப் பரவிவரும் இந்த கரோனா வைரஸ் 2000க்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளது. இதில் 53 பேர் உயிரிழந்துள்ளனர், 190 பேர் குணமாகியுள்ளார். இதனையடுத்து கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் நடந்த தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட பலருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ள சூழலில், விசா விதிகளை மீறியதால் 960 வெளிநாட்டு உறுப்பினர்களின் விசாவை ரத்து செய்வதோடு, அவர்களைக் கருப்புப் பட்டியலில் வைக்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இம்மாத தொடக்கத்தில் தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தில் நடந்த சிறப்பு மத வழிபாட்டுக் கூட்டத்தில் 2500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்தோனேசியா, தாய்லாந்து, உட்பட உலகின் பல இடங்களிலிருந்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள மக்கள் வந்திருந்தனர். இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ள சூழலில், தப்லீக் ஜமாத் இமாம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தப்லீக் ஜமாத் அமைப்பின் 960 வெளிநாட்டு உறுப்பினர்களைக் கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது இந்தியா. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தோனேசியாவைச் சேர்ந்த 379 பேர், வங்கதேசத்தைச் சேர்ந்த 110 பேர், கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 77 பேர், மலேசியாவைச் சேர்ந்த 75 பேர், தாய்லாந்தைச் சேர்ந்த 65 பேர், மியான்மாரைச் சேர்ந்த 63 பேர், இலங்கையைச் சேர்ந்த 33 பேர் உள்ளிட்ட 960 வெளிநாட்டினரின் விசாவை ரத்து செய்வதோடு அவர்களைக் கருப்பு பட்டியலில் சேர்ப்பதாக அறிவித்துள்ளது.