நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் பட்டியல் போன்ற பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை கிடைத்ததும் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று கூறி பா.ஜ.க எம்.பி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா மாவட்டத்தின் சித்தாபூர் பகுதியில் பா.ஜ.க சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் கர்நாடகா பா.ஜ.க. எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த் குமார் ஹெக்டே கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “அரசியலமைப்பை திருத்துவதற்கும், காங்கிரஸால் அதில் செய்யப்பட்ட திரிபுகள் மற்றும் தேவையற்ற சேர்த்தல்களை சரிசெய்வதற்கும் பாஜகவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை.
இந்து சமுதாயத்தை ஒடுக்கும் நோக்கத்தில் சட்டங்களைக் கொண்டுவந்து, அரசியலமைப்பை காங்கிரஸ் அடிப்படையிலேயே சிதைத்தது. தேவையற்ற விஷயங்களை நீக்க, குறிப்பாக இந்து விரோத விஷயங்களை நீக்க அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரவேண்டும். இவை அனைத்தையும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாமல் செய்யமுடியாது” என்று பேசினார். இவரது பேச்சு தற்போது சர்ச்சையாகி உள்ளது. இதற்கு, காங்கிரஸ் கட்சியினர் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது, “அரசியல் சட்டத்தை மாற்ற 400 இடங்கள் தேவை என்று பாஜக எம்.பி.யின் பேச்சின் மூலம் நரேந்திர மோடி மற்றும் அவரது சங்பரிவாரத்தின் மறைக்கப்பட்ட நோக்கங்களை பகிரங்கமாக அறிவிப்பதாகும். பாபா சாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பை அழிப்பதே நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் இறுதி இலக்கு. .
சமூகத்தைப் பிளவுபடுத்தி, ஊடகங்களை அடிமைப்படுத்தி, சுதந்திர அமைப்புகளை முடக்கி, எதிர்க்கட்சிகளை ஒழிக்க சதி செய்து இந்தியாவின் மாபெரும் ஜனநாயகத்தை குறுகிய சர்வாதிகாரமாக மாற்ற நினைக்கிறார்கள். இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளுடன் சேர்ந்து இந்த சதியை முறியடிப்போம். மேலும், அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள ஜனநாயக உரிமைகளுக்காக இறுதி மூச்சு வரை தொடர்ந்து போராடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.