Skip to main content

வகுப்பறை இல்லாமல் தவிக்கும் அரசுப்பள்ளி; பொதுத் தேர்வை புறக்கணிக்கும் மாணவர்கள்?

Published on 26/03/2025 | Edited on 26/03/2025

 

Govt school struggling without classrooms students boycotting public exams

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதிக்கக் கூடிய அரசுப்பள்ளிகளில் ஒன்று கிழக்கு கடற்கரை பகுதியான மணமேல்குடி ஒன்றியத்தில் உள்ள மீனவ கிராமம் பொன்னகரம் அரசு உயர்நிலைப் பள்ளி. கடந்த 2017இல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு கடந்த ஆண்டு வரை 10ஆம் வகுப்பு  பொதுத் தேர்வில் தொடர்ந்து 100% தேர்ச்சி பெற்று சாதித்து வரும் பள்ளியாக உள்ளது. இந்தப் பள்ளியில் 272 மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் தற்போது 10ஆம் வகுப்பில் 60 மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். ஆனால் மிகவும் பின்தங்கிய மீனவ குழந்தைகள் படிக்கும் இந்தப் பள்ளிக்கு இதுவரை ஒரு வகுப்பறை கட்டடம் கூட கட்டப்படவில்லை. அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 8 ஆண்டுகளில் ரூ.3 லட்சத்தில் ஒரே ஒரு யூனிட் மாணவர்களுக்கான கழிப்பறை மட்டுமே கட்டப்பட்டுள்ளது. மாணவர்கள் அமர்ந்து படிக்க வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

நடுநிலைப் பள்ளியாக இருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட போது நடுநிலைப் பள்ளிக்கான 3 வகுப்பறை கட்டடத்தை இரவல் வாங்கி அதில் ஒரு வகுப்பறையில் 11 கனிணிகளுடன் கனிணி ஆய்வகமும் மற்ற இரு வகுப்பறைகளில் 10ஆம் வகுப்பி இரு பிரிவு மாணவ, மாணவிகளுக்கும் வகுப்புகள் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு வரை இதே நிலை நீடிக்க பெற்றோர் ஆசிரியர் கழகம், பெற்றோர்கள், கிராம மக்கள் இணைந்து மாவட்ட ஆட்சியர், கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் என அனைவருக்கும் பல முறை மனுக்கள் கொடுத்தும் பலனில்லை. வெயிலிலும் மழையிலும் தங்கள் குழந்தைகள் அவதிப்படுவதைப் பார்த்த கிராம மக்கள் தங்கள் சொந்த செலவில் 2 வகுப்பறை கட்டடம் ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளனர்.

Govt school struggling without classrooms students boycotting public exams

அதில் 8, 9ஆம் வகுப்புகள் நடத்தப்பட மீதமுள்ள 6, 7ஆம் வகுப்பு மாணவர்கள் அமர இடமில்லை என்பதால் நல்உள்ளம் கொண்ட ஆசிரியர்கள் இணைந்து ஒரு பெரிய தகர சீட் கொட்டகை அமைத்துக் கொடுத்துள்ளனர். வெயில் நேரங்களில் அதிலும் அமர முடியாத மாணவர்களுக்கு பழைய காலம் போல மரத்தடி நிழலே வகுப்பறைகளானது. தற்போது வரை ஒரு வகுப்பறை கூட இல்லாமல் தவிக்கும் மாணவர்களுக்கு வகுப்பறை கட்டம் கேட்டு மீண்டும் மனு அனுப்பும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர் பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்.எம்.சி. நிரவாகம் மற்றும் கிராம மக்கள்.

இது குறித்து அவர்கள் கூறும் போது, “ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியாக இருந்து மாணவர்கள் எண்ணிக்கைக அதிகரித்த நிலையில் கடந்த 2017இல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பால் சுற்றியுள்ள பல மீனவ கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களையும் கொண்டு வந்து சேர்த்தார்கள். பகைமை கொண்ட கிராமங்கள் கூட இந்தப் பள்ளியால் ஒற்றுமையானது என்பது பெரிய சாதனை. அதே போல உயர்நிலைப் பள்ளியாகி இதுவரை நடந்த 6 பொதுத் தேர்வுகளிலும் 10ஆம் வகுப்பில் 100% தேர்ச்சியை கொடுத்துள்ளனர். அதனால் பல வெளியூர்களில் இருந்து மாணவர்கள் சேர்க்கைக்கு வரும் போது கட்டடம் இல்லை என்பதால் சேர்க்க முடியாமல் போறது.

Govt school struggling without classrooms students boycotting public exams

பழைய நடுநிலைப் பள்ளி கட்டத்தில் தான் 2 வகுப்புகள் நடக்கிறது. ஒவ்வொரு வகுப்பிலும் 55, 60 மாணவ, மாணவிகள் உள்ளனர். ஒவ்வொரு வகுப்பையும் இரண்டாக பிரித்து பாடம் நடத்தலாம் என்றால் வகுப்பறைக்கு எங்கே போறது. அதனால் ஒரே வகுப்பாக வைத்திருக்கிறார்கள். நாங்களும் மனு கொடுக்காத அதிகாரி இல்லை, மக்கள் பிரதிநிகள் இல்லை. எங்கள் மீனவ கிராம மாணவர்கள் மீது அவர்களுக்கு என்ன கோபமோ ஒரு கட்டடம் கூட கட்டித்தரல. ஒரே ஒரு கழிவறை கட்டிக் கொடுத்தாங்க. உயர்நிலைப் பள்ளிக்கு என்று உள்ள கட்டடம் அது தான். அந்த ஒரு யூனிட் கழிவறையில் தான் 15 நிமிட இடைவேளையில் 168 மாணவர்கள் இயற்கை உபாதையை ழிக்கனும். அதே போல நடுநிலைப் பள்ளிக்கு என்று உள்ள ஒரு யூனிட் கழிப்பறையில் தான் 106 மாணவிகள் 15 நிமிடத்தில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய அவல நிலையில் உள்ளது எங்கள் பள்ளி.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பால் தொடர்ந்து சாதிக்கும் எங்கள் பள்ளிக்கு மாணவர்கள் படிக்க வகுப்பறைகள் கட்டித்தாங்கனு கேட்காத மக்கள் பிரதிநிகள், அதிகாரிகள் இல்லை. ஆனால் எங்கள் கோரிக்கை யார் காதிலும் கேட்கவில்லை. அதனால் வெள்ளிக்கிழமை தொடங்கும் இந்த ஆண்டுக்கான 10 வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் குழந்தைகளின் தேர்வு முக்கியம் என்கிறார்கள். தேர்வுகளை புறக்கணித்தாலாவது எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிள் வருவாங்களா என்ற எண்ணத்தில் இருக்கிறோம்.

Govt school struggling without classrooms students boycotting public exams

ஒவ்வொரு நாளும் மழை, வெயிலில் எங்கள் குழந்தைகள் நடும் பாட்டை எங்களால் காண முடியவில்லை என்றனர். மேலும் கோட்டைப்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 550 மாணவிகள் படிக்கிறார்கள் அங்கே ஒரே வகுப்பறை தான் உள்ளது. கடலோர கிராம மீனவ குழநதைகள் படிக்க கூடாது என்று அதிகாரிகாள் பள்ளிகளை புறக்கணிக்கிறார்ளா என்ற எண்ணம் தான் தோன்றுகிறது” என்றனர். இந்த கண்ணீர் கோரிக்கைகள் பற்றி மாவட்ட கல்வி அதிகாரியிடம் கேட்ட போது, ” “வகுப்பறைகள் இல்லாத பற்றாக்குறை உள்ள பள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டு பட்டியல் தயாரித்து புதிக கட்டடங்கள் கேட்டு கோப்பு அனுப்பி உள்ளோம். அதில் பொன்னகரம், கோட்டைப்பட்டினம், திருநாளூர் தெற்கு உள்பட பல பள்ளிகள் உள்ளது. மிக விரைவில் கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஏழை மீனவ குழந்தைகளை இப்போது தான் படிக்க அனுப்புகின்றனர். அந்த குழந்தைகளின் படிப்புக்கு கட்டடங்கள் முற்றுப்புள்ளியாகிவிடக் கூடாது. வெள்ளிக்கிழமை பொன்னகரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 60 பேர் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதும் புறக்கணிப்பதும் அதிகாரிகள் கையில் தான் உள்ளது. 

சார்ந்த செய்திகள்