
இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய ரயில்வே துறைக்கு அடுத்தப்படியாக வக்பு வாரியத்தின் கீழ் தான் அதிக சொத்துக்கள் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சொத்துக்களை கண்காணிப்பதற்காக 1954ஆம் ஆண்டி வக்பு சட்டம் கொண்டுவரப்பட்டு, 1958ஆம் ஆண்டில் அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் அமைக்கப்பட்டது. அன்று முதல் வக்பு சட்ட விதிகளின்படி, வக்பு வாரிய சொத்துக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி (08.08.2024) மக்களவையில் தாக்கல் செய்தார்.
அந்த மசோதாவில், இஸ்லாமிய பெண்கள், இஸ்லாமியர் அல்லாதோர் வக்பு வாரியத்தில் இடம்பெற செய்வது, வக்பு நிலத்தை அளவீடு செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் இடம்பெற்றிருந்தன. அப்போது இந்த மசோதாவிற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த சட்டத் திருத்த மசோதாவில் கடும் சர்ச்சைகள் இருக்கும் காரணத்தால், நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒன்றை அமைத்து மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில் தான் வக்பு சட்டத் திருத்த மசோதாவைப் பரிசீலிக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டு ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து 655 பக்கங்கள் கொண்ட வக்பு சட்டத்திருத்த மசோதா அறிக்கைக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டரது. அதோடு வக்பு திருத்த மசோதாவின் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி (13.02.2025) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அடுத்த வாரம் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை (27.03.2025) தீர்மானம் கொண்டு வருகிறது. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிடக் கோரும் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிகிறார். வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.