ஹைதராபாத்தை சேர்ந்த 28 வயது தொழிலதிபர் சிரித்த முகம் வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்துகொள்ள முயன்றபோது சிகிச்சையின் போதே உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த 28 வயது தொழிலதிபர் லட்சுமி நாராயணன். அண்மையில் லட்சுமி நாராயணனுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தனக்கு சிரித்த முகம் இருக்க வேண்டும் என்பதற்காக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுத்து ஹைதராபாத் ஜூபிலி பகுதியில் உள்ள எப்.எம்.எஸ் இன்டர்நெஷனல் டெண்டல் கிளினிக்கில் கடந்த 16 ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
தான் அறுவை சிகிச்சை செய்யப்போவதை வீட்டில் யாருக்கும் லட்சுமி நாராயணன் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. கிளினிக்கிற்கு தனியாக சென்ற அவருக்கு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருக்கும்போதே அவர் உயிரிழந்தார். இதற்கிடையில் லட்சுமி நாராயணின் தந்தை ராமுலு அவருக்கு போன் செய்துள்ளார். அப்பொழுது அழைப்பை எடுத்த கிளினிக் ஊழியர்கள் அவர் இறந்துவிட்டதை தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை ராமுலு அலறித்துடித்துள்ளார்.
தொடர்ந்து அதிகஅளவிலான மயக்க மருந்து கொடுத்ததால் தன் மகன் உயிரிழந்ததாக போலீசில் லட்சுமி நாராயணனின் தந்தை புகார் அளித்துள்ளார். அவரின் புகாரில் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.