டெல்லி நிர்பயா வழக்கு குற்றவாளியின் மறு சீராய்வு மனு மீதான தனது தீர்ப்பை உச்சநீதிமன்ற அமர்வு அறிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஒருவர் சிறையில் இருக்கும்போது தற்கொலை செய்து கொண்டார். மற்ற நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்நிலையில் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி, குற்றவாளிகளில் ஒருவனான அக்சய் சிங் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண், போபண்ணா அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இதில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், அக்சய் சிங் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் விரைவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.