தீபாவளியின்போது பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க அனுமதி கோரி, இந்தியாவில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் இன்று (29/09/2021) இரண்டாவது நாளாக நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் விதிகளை மீறி பட்டாசுகளைத் தயாரித்திருக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து நீதிபதிகள், நாட்டில் எல்லாவற்றிலும் கொண்டாட்டங்கள்தான்; கொண்டாட்டம் மிக முக்கியமானதுதான். கொண்டாட்டம் என்பது மற்றவர்களைத் துன்புறுத்தும் வகையில் இருக்கக் கூடாது. சி.பி.ஐ. வழங்கியுள்ள முதற்கட்ட அறிக்கையில் பட்டாசு உற்பத்தியில் மிகக் கடுமையான விதிமுறை மீறல்கள் ஏற்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். தடை செய்யப்பட்ட பேரியம், நைட்ரேட் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் கொண்டு பட்டாசு தயாரிக்கப்பட்டதா? விதிமீறல் தொடர்பாக சி.பி.ஐ. இணை ஆணையர் விசாரணை நடத்தி, பட்டாசு தயாரிப்பு விதிமீறல்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை ஆறு வாரத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சி.பி.ஐ.யின் முதற்கட்ட அறிக்கைகளை மனுதாரர்கள், எதிர்மனுதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு விசாரணையானது உச்ச நீதிமன்றத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.