
நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அதே வேளையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் கொண்ட அறிக்கையை கடந்த 5ஆம் தேதி காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர். 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ஒரு சில கோடீஸ்வரர்களின் ரூ.16 லட்சம் கோடியை ஒரேயடியாகத் தள்ளுபடி செய்தார் நரேந்திர மோடி. இவ்வளவு பணத்தில், மகாத்மா காந்தி 100 நாள் வேலை போன்ற புரட்சிகரமான திட்டத்தை 24 ஆண்டுகளாக நடத்தி இருக்க முடியும்.
காங்கிரஸின் திட்டங்களுக்கு எங்கிருந்து பணம் வரும் என்று கேட்பவர்கள், இந்த புள்ளிவிவரங்களை உங்களிடமிருந்து மறைக்கிறார்கள். நண்பர்களுக்கு காட்டிய கருணை போதும். சாமானியர்களுக்கு அரசு கஜானாவை திறக்கும் நேரம் இது’ என்று பதிவிட்டுள்ளார்.