பாஜக கட்சியைச் சேர்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினர் சுமித்ரா மகாஜன். நாடாளுமன்றத்தில் அதிக காலம் பெண் எம்.பி.யாக பணியாற்றிய பெருமைக்கு உரிய இவர், மக்களவை சபாநாயகராகவும் இருந்துள்ளார். இந்தநிலையில், இவர் காலமாகிவிட்டதாக தகவல்கள் பரவின. காங்கிரஸ் எம்.பி. சசி தரூரும் இரங்கல் தெரிவித்திருந்தார்.
ஆனால் சசிதரூருக்கு பதிலளித்த பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா, சுமித்ரா மகாஜன் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். இதன்மூலம் சுமித்ரா மகாஜன் இறந்ததாக வெளியான செய்தி புரளி என உறுதியானது. இதனையடுத்து சசி தரூர் தனது ட்வீட்டை நீக்கியதோடு, சுமித்ரா மகாஜன் நீண்டகாலம் வாழ வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.
மேலும், சுமித்ரா மகாஜனின் மகனும் தனது தாய் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், “எனது தாயர் நலமுடன் இருக்கிறார். அவரைப் பற்றி பரப்பப்படும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம். அவரது கரோனா பரிசோதனையின் முடிவு நெகட்டிவ். அவரை மாலையில்தான் சந்தித்தேன். அவர் ஆரோக்கியமுடன் இருக்கிறார்” என தெரிவித்தார்.