கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் திவால் என அறிவிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்திருக்கும் நிலையில் வரும் 5ம் தேதி வரை அந்த நிறுவனத்தின் விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம், குறைந்த கட்டண விமான சேவை வழங்குவதில் பெயர் பெற்றது. இந்நிறுவனம் சொந்தமாக 59 விமானங்களைக் கொண்டுள்ளது. ஆனால், சமீப காலமாக என்ஜின் பழுது காரணம் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக 25 விமானங்கள் இயக்கப்படாமல் உள்ளன. தொடர் நிதி நெருக்கடி மற்றும் 25 விமானங்கள் இயக்காமல் இருப்பதால், தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் அந்த நிறுவனம் திவால் தீர்மானத்துக்கான விண்ணப்பத்தை கொடுத்துள்ளது.
டெல்லி மற்றும் ஸ்ரீநகரில் இருந்து மும்பை வந்துகொண்டிருந்த அந்நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் திடீரென அவசர அவசரமாக குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன. அதில் பயணித்த பயணிகள் தங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த விமானங்கள் மீண்டும் மும்பை வரை இயக்கப்பட்டன.
தொடர்ந்து அந்த நிறுவனம் எந்தவித முன் அறிவுப்பும் இன்றி திடீரென தங்கள் விமான சேவை மே 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை நிறுத்தப்படுகிறது என அறிவித்தது. அதன் காரணமாக இன்று இயக்கப்படவேண்டிய அந்நிறுவனத்தின் விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த நிறுவனத்தின் விமானத்தில் பயணிக்க திட்டமிட்டு முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அந்நிறுவனம் தெரிவிக்கையில், ரத்து செய்யப்பட்டுள்ள விமானத்தில் முன்பதிவு செய்திருக்கும் பயணிகளுக்கு அவர்களின் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்றும், பயணிகளுக்கான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.