
காங்கிரஸ் கட்சி சார்பில் குஜராத்தில் இன்றும் (08.04.2025) நாளையும் (09.04.2025) என இரு நாட்கள் தேசிய மாநாட்டை அக்கட்சி நடத்தி வருகிறது. அக்கட்சியின் தேசிய மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், மாநிலத் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், அக்கட்சியின் காரியக் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
அந்த வகையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எம்.பி. கலந்துகொண்டார். இந்நிலையில் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதனால் அவர் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைக் கண்ட கட்சி நிர்வாகிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மயக்கமடைந்த ப. சிதம்பரத்தை கட்சித் நிர்வாகிகள் அம்புலன்ஸை நோக்கி தூக்கி செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது தொடர்பாக அவரது மகனும், சிவகங்கை மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் செய்தி சேனலுக்கு அளித்துள்ள விளக்கத்தில், “என் தந்தை நலமாக இருக்கிறார். அவர் மருத்துவர்களால் பரிசோதிக்கப்படுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.