5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வந்தது. இதற்காகக் கடந்த வாரம் மாநில தேர்தல் பார்வையாளர்களை வரவழைத்து, தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி இருந்தது. ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை ஆயுட்காலம் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில், அதற்கான தீவிர ஆலோசனைகள் நடைபெற்றது. இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று 12 மணிக்கு நடைபெற்ற தேர்தல் ஆணையர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அறிவிப்பின் படி, 3.17 கோடி வாக்காளர்களையும், 119 தொகுதிகளையும் கொண்ட தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நவம்பர் மூன்றாம் தேதி தொடங்குகிறது. 5.25 கோடி வாக்காளர்களையும், 200 தொகுதிகளையும் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 30ஆம் தேதி தொடங்குகிறது. 5.06 கோடி வாக்காளர்களையும், 230 சட்டப்பேரவைகளையும் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் நவம்பர் 7ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 17ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. சத்தீஸ்கரில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்பு மனுத்தாக்கல் 13.10.2023 அன்று தொடங்குகிறது. சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் 21.10.2023 அன்று தொடங்குகிறது. டிசம்பர் மூன்றாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அதேபோல் மிசோரத்தில் நவம்பர் 7ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 13.10.2023 அன்று தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் மூன்றாம் தேதி நடைபெறுகிறது.