இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க இந்திய உச்சநீதிமன்றம், விசாரணை குழு அமைத்துள்ளது.
இந்தநிலையில் இந்தநிலையில் பிரபல அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ், பெகாசஸை உலக நாடுகள் வாங்கியது குறித்தும், அந்தநாடுகள் அவற்றை எப்படி பயன்படுத்தியது என்பது குறித்து விரிவான புலனாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையில், 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா கடந்த 2017 ஆம் ஆண்டு பெகாசஸ் மென்பொருளை வாங்கியதாக கூறியுள்ளது. இது இந்திய அரசியல் வட்டாரங்களில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பெகாசஸை பயன்படுத்தியதன் மூலம் மோடி அரசு தேசத்துரோகம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தநிலையில் பெகாசஸ் விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகிய இருவரும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர்கள் கூறியதாவது: இஸ்ரேலிய உளவு மென்பொருளான பெகாசஸை சட்டவிரோதமாகவும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாகவும் உளவு பார்க்க மோடி அரசு பயன்படுத்தி வந்தது, இதில் மோடிக்கும் சம்மந்தம் உள்ளது என நீண்டநாட்களாக கூறி வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மக்களின் பணத்தை, தங்களது சொந்த மக்களைக் உளவுபார்க்க பயன்படுத்தியுள்ளார்கள். 2019 மக்களவைத் தேர்தலின்போது ஜனநாயகத்தை அபகரித்துள்ளனர். இது தேசத்துரோகச் செயல்
பெகாசஸை வாங்கியது மற்றும் பயன்படுத்தியது தொடர்பாக நேரடியாக கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றத்தை மோடி அரசு தவறாக வழிநடத்தியுள்ளது. மத்திய அரசு தனது பிரமாண வாக்குமூலத்தில், தன் மீது கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் சந்தேகத்திற்கு இடமின்றி மறுத்துள்ளது. பிரதமர் மோடியின் பயணத்தின்போது இஸ்ரேலிடம் இருந்து சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் உளவு சாதனங்கள் உள்ளிட்டவை அடங்கிய ஒரு தொகுப்பின் மையப்பொருளாக மோடி அரசாங்கம் பெகாசஸ் உளவு மென்பொருளையும், பிற ராணுவ தொழில்நுட்பங்களையும் கடந்த 2017 ஆம் ஆண்டு வாங்கியுள்ளது. 2017-18ல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில் செயல்படும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் (NSCS) பட்ஜெட் 33 கோடி ரூபாயில் இருந்து 333 கோடி ரூபாயாக உயர்ந்தது தற்செயலான நிகழ்வு அல்ல.
ராகுல் காந்தி மற்றும் அவரது ஊழியர்கள், முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா மற்றும் எச்டி குமாரசாமி, பாஜக முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, மத்திய அமைச்சர் அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், அவரது மனைவி மற்றும் ஊழியர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அவரது மனைவி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கான சிறப்பு அதிகாரி, மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்திய தேர்தல் ஆணையம், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர், எல்லை பாதுகாப்பு படை தலைவர் கே.கே.சர்மா, ரா அதிகாரி ஜிதேந்தர் குமார் ஓஜா, அவரது மனைவி, இந்திய ராணுவ அதிகாரிகள் கர்னல் முகுல் தேவ் மற்றும் கர்னல் அமித் குமார் ஆகியோரை உளவு பார்க்க மோடி அரசு பெகாசஸை பயன்படுத்தியுள்ளது.
பெகாசஸ் உளவு மென்பொருள் இலக்கு பட்டியலில், வழக்கறிஞர்களும், சமூக ஆர்வலர்களும், தி இந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, தி மின்ட், தி வயர், எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி, டிவி18, தி ட்ரிப்யூன், அவுட்லுக், டிஎன்ஏ, நியூஸ்கிளிக் ஆகிய முக்கிய ஊடக நிறுவனங்களின் பத்திரிகையாளர்களும் இடம்பெற்றுள்ளனர். அரசாங்கம் பாராளுமன்றத்தை ஏமாற்றியுள்ளது. காங்கிரஸ் மற்ற எதிர்க்கட்சிகளுடன் பேசி, இந்த விவகாரத்தில் ஒருங்கிணைந்த வியூகத்தை வகுக்கும். இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.