41வது ஜிஎஸ்டி கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதை சுப்பிரமணியன் ஸ்வாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த வியாழன் அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பொருளாதாரம் கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டது, கரோனா கடவுளின் செயல்" எனக் குறிப்பிட்டார். அவரது இந்த பேச்சை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது பாஜகவின் சுப்ரமணியன் ஸ்வாமியும் இதனை விமர்சித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், "கோவிட்-19 கடவுளின் செயல் என்று மத்திய நிதி அமைச்சர் குறிப்பிட்டதாக எனக்கு கிடைத்த நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜிடிபி சரிவானது 2015-ம் ஆண்டிலிருந்தே நிகழ்ந்துள்ளது. 2015-ல் ஜிடிபி 8 சதவீதமாக இருந்தது. 2020-ம் ஆண்டு முதல் காலாண்டில் இது 3.1 சதவீதமாக சரிந்துள்ளது. இது கரோனா பரவலுக்கு முந்தைய நிலவரமாகும். இதுவும் கடவுளின் செயலா?
மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக இரண்டு வாய்ப்புகள் மாநிலங்களுக்கு வழங்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் ரிசர்வ் வங்கியிடம் குறைந்த வட்டிக்கு ரூ.97,000 கோடியைக் கடனாக பெறலாம். இந்த தொகையை 5 ஆண்டுகளுக்கு பிறகு வரி வசூல் அதிகரிக்கும்போது திரும்ப செலுத்தலாம் அல்லது மாநில அரசுகளே இந்த ஆண்டு ஏற்படும் ஜிஎஸ்டி பற்றாக்குறையான ரூ.2.35 லட்சம் கோடியை ஏற்றுக் கொள்வது என்பதாகும். இதை மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியுடன் கலந்து பேசி முடிவெடுக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.