ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீது சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்ட் வழக்கின் விசாரணை இன்று டெல்லி கூடுதல் மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது ராகுல் மற்றும் சோனியா தரப்பு வழக்கறிஞரான சீமா, வழக்கு தொடர்ந்த சுப்பிரமணியன் ஸ்வாமியை விசாரித்தார். நீதிபதி சமர் விஷால் முன்னிலையில், வழக்கு தொடர்பாக பல கேள்விகளை சீமா, சுப்பிரமணியன் சுவாமியிடம் எழுப்பினார்.வழக்கு விசாரணையின் போது சீமா, இந்தியில் பேசினார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, “ஆங்கிலத்தில் பேசுங்கள்; நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலம் தான்” என கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி விஷால், “இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டுமே நீதிமன்றத்தின் மொழிதான்; இந்தி தேசிய மொழி” என்றார்.இதனை அடுத்து சில நிமிடங்களில் மீண்டும் சுப்பிரமணியன் சுவாமியிடம் சீமா இந்தியில் கேள்வி எழுப்பினார்.
மீண்டும் ஆட்சேபம் தெரிவித்த சுவாமி, “ஆங்கிலத்தில் பேசுங்கள்; நான் தமிழன்” என்றார். இதனை அடுத்து, சீமா ஆங்கிலத்தில் கேள்விகளை எழுப்பினார். இந்த நிகழ்வுகளால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்திய அலுவல் மொழி மட்டுமே, தேசிய மொழி அல்ல என்று ஏற்கனவே மத்திய அரசு தெளிவுபடுத்திய நிலையில் நீதிபதியின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.