உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஒமிக்ரான் பாதிப்பு, இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன், ஒமிக்ரான் தொடர்பாக மாநிலங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "கரோனா வைரசின் ஒமிக்ரான் திரிபு டெல்டாவை விட மூன்று மடங்கு அதிகம் பரவும் தன்மை கொண்டது. ஒமிக்ரான் தவிர, டெல்டா மாறுபாடும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ளது. எனவே இன்னும் பெரிய தொலைநோக்குப் பார்வையும், தரவு பகுப்பாய்வும், திறமையான முடிவுகளை எடுப்பதும், உள்ளூர் மட்டும் மாவட்ட அளவில் கடுமையான மற்றும் உடனடி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் அவசியமாகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்களில் முடிவுகளை விரைவாகவும் கவனமாகவும் எடுக்க வேண்டும்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகை, மருத்துவமனை உள்கட்டமைப்பு மற்றும் நோய்த்தொற்றின் புவியியல் பரவல் போன்ற பல்வேறு அம்சங்களில் மாவட்ட அளவில் வெளிவரும் தரவுகளை மாநிலங்கள் தொடர்ந்து ஆய்வுசெய்ய வேண்டும். ஒரு மாவட்டத்தில் கரோனா உறுதியாகும் சதவீதம் 10%க்கும் அதிகமாக இருந்தாலோ அல்லது 40%க்கும் அதிகமான ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் ஒருவாரத்திற்கு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தாலோ அதிகாரிகள் உடனடியாக கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும். இதன்மூலம் மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்குத் தொற்று பரவுவதற்கு முன்பு உள்ளூர் மட்டத்திலேயே கரோனா பரவலைக் கட்டுப்படுத்தலாம். உள்ளூர் சூழ்நிலை மற்றும் ஒமிக்ரான் பரவும் விகிதத்தைப் பொறுத்து, இந்த வரம்புகளை எட்டுவதற்கு முன்பே மாநிலங்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கலாம்.
கரோனா கிளஸ்டர் கண்டறியப்பட்டால், அனைத்து நோயாளிகளின் மாதிரிகளும் மரபணு வரிசைமுறைக்காக இந்திய கரோனா ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். கரோனா பரிசோதனை மற்றும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும். ஆக்சிஜன் இருப்பு, மருந்துகளின் கூடுதல் இருப்பு ஆகியவற்றையும் அதிகரிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துதல், பெரிய கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல், திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல், அலுவலகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என ராஜேஷ் பூஷன் தனது கடிதத்தில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.