கடந்த மே மாதத்தில் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், ஜூன் முதல் வாரத்தில் கணிசமாக உயர்ந்து உள்ளன.
ஜூன் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஒரு வாரம் முழுவதுமே இந்திப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்தன. கடந்த வாரத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 34 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. வர்த்தகத்தின் இறுதி நாளான ஜூன் 5ம் தேதி, 34287 புள்ளிகளில் நிறைவடைந்தது. அன்று மட்டும் 306 புள்ளிகள் வரை மும்பை பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருந்தது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி, கடந்த 5ம் தேதி 10142 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு அடைந்தது. கடைசி நாளில் மட்டும் 113 புள்ளிகள் வரை சந்தை நிலவரம் உயர்ந்து இருந்தன. நிப்டியில் சந்தை நிலவரத்தைக் கணக்கிட உதவும் 50 நிறுவனங்களில் 40 நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக உயர்ந்து இருந்தன. வார இறுதியில் டாடா மோட்டார்ஸ் 13.65%, எஸ்பிஐ வங்கி பங்குகள் 8.73%, இன்ப்ராடெல் நிறுவனப் பங்குகள் 8.34%, டாடா ஸ்டீல் பங்குகள் 6.17%, ஹிண்டால்கோ பங்குகள் 5.01% வரை ஏற்றம் கண்டிருந்தன.
குறிப்பாக, மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் தொலைதொடர்பு நிறுவனங்களின் பங்குகளுக்கு கடும் கிராக்கி நிலவியது. ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தில் பேஸ்புக் நிறுவனம் கணிசமான முதலீடுகளைச் செய்துள்ளதால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலைகள் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தன. கடந்த 15 நாள்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
அதேபோல், பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் அமேசான் நிறுவனமும், வோடபோன் ஐடியா நிறுவனத்தில் கூகுள் நிறுவனமும் முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் கசிந்ததால், அந்நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தினர்.
இதனால் வோடபோன் ஐடியா நிறுவனப் பங்குகள் கடந்த 15 நாள்களில் 4 ரூபாயில் இருந்து 10.50 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. பார்தி ஏர்டெல் பங்கு கடந்த வெள்ளியன்று நிப்டியில் 11 ரூபாய் வரை உயர்ந்து, 584 ரூபாயில் முடிவடைந்தது.
நாளை முதல் வரும் நாள்களிலும் மேற்சொன்ன மூன்று டெலிகாம் நிறுவனப் பங்குகளின் விலை மேலும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால் முதலீட்டாளர்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.