மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் 35 அடியில் பிரமாண்டமாக மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வெண்கல உருவச் சிலை அமைக்கப்பட்டது. இதனைக் கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி (04.12.2023) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில நாட்களாகப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான் சிவாஜியின் சிலை கீழே விழுந்து நொறுங்கியது. 35 அடி உயர் சத்ரபதி சிவாஜியின் சிலை, தலை, கை மற்றும் கால் எனத் தனித் தனியாக முழு சிலையும் விழுந்து நொறுங்கிய சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்ற முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த சிலை திறக்கப்பட்டு எட்டே மாதத்தில் சிலை சேதமடைந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் சிலை சேதத்திற்கான சரியான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவிக்கையில், “ சிலை அமைக்கப்பட்டதில் ஊழல் நடந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் பாஜக- ஷிண்டே தலைமையிலான சிவசேனா - அஜித் பாவர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.