நாடு முழுவதும் சினிமா படப்பிடிப்புகளைத் தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.
அதில், "படப்பிடிப்பு தளங்களில் 6 அடி தனிமனித இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும். குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்த வேண்டும். ஒப்பனை கலைஞர்கள், சிகையலங்காரக் கலைஞர்கள் அனைவரும் கட்டாயம் கவச உடை அணிந்து பணியாற்ற வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், எச்சில் துப்பக்கூடாது.
படப்பிடிப்பு தளத்தில் கேமராவின் முன் நடித்துக்கொண்டிருப்பவர்களைத் தவிர மற்ற அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்கள், ரசிகர்களை அனுமதிக்கக் கூடாது. உடைகள், விக், ஒப்பனை பொருட்கள் பகிர்ந்து கொள்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்". இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலைஞர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குவதே நோக்கம்; வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் உடனே சினிமா படப்பிடிப்புகளைத் தொடங்கலாம் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.