கிறிஸ்தவர்களின் முக்கியப் பண்டிகைகளில் கல்லறைத் திருவிழாவும் ஒன்றாகும். முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடைபெறும் இந்தக் கல்லறைத் திருவிழாவில் அனைத்து கிறிஸ்தவ ஆலயக் கல்லறைகளிலும் சிறப்புப் பிரார்த்தனை மற்றும் கல்லறைகளை அலங்கரித்து கிறிஸ்தவர்கள் வழிபடுவது வழக்கம். ஆண்டுதோறும் நவம்பர் 2-ம் தேதி கடைப்பிடிக்கப்படும் கல்லறைத் திருவிழாவை முன்னிட்டு இன்று புதுச்சேரியில் உப்பளம், முத்தியால் பேட்டை, நெல்லித்தோப்பு, உழவர்கரை, வில்லியனூர், அரியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்லறைகளைக் கிறிஸ்தவர்கள் சுத்தம் செய்து வண்ணப் பூக்களைக் கொண்டு கல்லறையை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.
கல்லறை தினத்தையொட்டி பெங்களூர், ஊட்டி மற்றும் தமிழகப் பகுதியிலிருந்து பட்ரோஸ், ஜெர்புரா, மினி ரோஸ், சாமந்தி, ரோஜா, உள்ளிட்ட பல வகையான வண்ணப் பூக்கள் வரவழைக்கப்பட்டன. இவை கல்லறைகள் அருகே விற்பனை செய்யப்பட்டன.