பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு, இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் அல்லாத பிற மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் மசோதா கடந்த ஜனவரி மாதம் மக்களவையில் நிறைவேறியது.
இந்த மசோதா இன்னும் மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூறிய ராஜஸ்தான் மாநில அமைச்சர் சாந்தி தரிவால்,“மத்திய அரசின் விதிமுறைகளின்படி இடம்பெயர்ந்து வந்த இந்து மக்களுக்கு குடியுரிமை வழங்க ஜோத்பூர், ஜெய்சால்மர் மற்றும் ஜெய்பூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
இதுவரை 2656 பேர் குடியுரிமைக்கு விண்ணப்பத்த நிலையில், அதில் 1112 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 434 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. 783 பேரின் விண்ணப்பம் பாதுகாப்பு சோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.