Skip to main content

முதல்வர் பதவியை தருவதாக நாங்கள் கூறினோமா..? அமித்ஷா கொதிப்பு!

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அதிரடியாக அமல்படுத்தியது. இதையடுத்து, அங்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும், தாங்கள் ஆட்சியமைக்க உரிமைக் கோரவில்லை என பாஜக அறிவித்தப்பின், சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சில நாள்களாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே அடுத்தடுத்து நடைபெற்று வந்த அரசியல் நகர்வுகள் அப்படிதான் இருந்தன. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்தும், சிவசேனா உடனான உறவு முறிவு குறித்தும் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அமித் ஷா இன்று அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியதாவது,

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி வெற்றிப் பெற்றால், தேவேந்திர ஃபட்னாவிஸ் தான் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடியும், நானும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் பலமுறை கூறி வந்தோம். அப்போதெல்லாம் எங்களின் இந்தப் பேச்சுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, சிவசேனா புதிய கோரிக்கைகளை முன்வைத்தது ஏற்புடையதாக தோன்றவில்லை. முக்கியமாக, இரண்டரை ஆண்டு காலம் அவர்களுக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என்பதை பாஜக ஒருபோதும் ஏற்கவில்லை. இதற்கு முன்பு, வேறு எந்த மாநிலத்திலும் ஆட்சி அமைப்பதற்கு 18 நாள்கள் அவகாசத்தை ஆளுநர் அளித்ததாக தெரியவில்லை. மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையின் ஆயுள்காலம் முடிந்த பிறகுதான், கட்சிகளை ஆட்சியமைப்பதற்கான உரிமை கோர ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால், சிவசேனாவோ, தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் கூட்டணியோ, ஏன் பாஜக கூட ஆட்சி அமைக்க உரிமைக் கோரவில்லை. அதன் பிறகுதான் வேறு வழியின்றி அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்போதும் ஒன்று கெட்டுப்போய் விடவில்லை. மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேவையான எம்எல்ஏக்களின் பலம் தங்களுக்கு இருப்பதாக எந்தக் கட்சியாவது கருதினால், அவர்கள் தாராளமாக ஆளுநரை அணுகி ஆட்சியமைக்க உரிமைக் கோரலாம் என்று அவர் கூறினார்.
 

 

சார்ந்த செய்திகள்