மோடி சமுதாயத்தை இழிவுபடுத்திவிட்டதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டெல்லியில் காந்தியின் நினைவிடம் உள்ள ராஜ்காட் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு இருந்தது. 'சங்கல்ப் சத்தியாகிரக' என்ற பெயரில் போராட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டு இருந்தது. தற்போதைய காங்கிரஸின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி என மூத்த தலைவர்கள் பலரும், தொண்டர்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகலந்துகொண்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்கு டெல்லி காவல்துறை சார்பில் நோட்டீஸ் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் உங்களது போராட்டத்திற்கு அனுமதி மறுக்கிறோம் என தெரிவித்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிக்குள் யாரும் கூட்டமாக செல்ல வேண்டாம் என்ற கோரிக்கையை டெல்லி காவல்துறை கொடுத்துள்ளது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், 'நாட்டின் குரலுக்காக நான் போராடுகிறேன்; நாட்டுக்காக எந்த விலையும் கொடுக்கத் தயார்' எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது டிவிட்டர் பக்கத்தின் பையோ எனப்படும் சுய விவர குறிப்பில் 'தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி' என திருத்தியுள்ளார்.