பீகார் மாநில தேர்தல் தோல்வியைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளார் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் ஷிவானந் திவாரி.
பீகார் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதேநேரம் இத்தேர்தலில் 75 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி உருவெடுத்தாலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இதன்காரணமாக ஆர்.ஜே.டி கட்சி ஆட்சியமைக்க முடியாமல் போனதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியைக் குற்றம் சுமத்த மாட்டோம் எனத் தேஜஸ்வி யாதவ் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், பீகார் மாநில தேர்தல் தோல்வியைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளார் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் ஷிவானந் திவாரி.
தேர்தல் தோல்வி குறித்துப் பேசியுள்ள அவர், "தேர்தல் நேரத்தில் சிம்லாவில் உள்ள பிரியங்கா காந்தியின் இடத்தில் ராகுல் காந்தி சுற்றுலாவிற்குச் சென்றார். கட்சியை இப்படித்தான் நடத்துவதா? காங்கிரஸ் செயல்பாடுகளில் சுமத்தப்படும் குற்றங்களே பாஜகவுக்கு பலமாக மாறிவிடுகிறது. அவர்கள் 70 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தனர், ஆனால் 70 பொதுக்கூட்டங்கள் கூட நடத்தவில்லை. ராகுல் காந்தி 3 நாட்கள் வந்தார், பிரியங்கா வரவில்லை, பீகார் பற்றி அறிமுகமில்லாதவர்கள் இங்கு வந்தார்கள். இது சரியல்ல. பீகாரில் மட்டும் இப்படி நடக்கவில்லை. மற்ற மாநிலங்களிலும், அதிகபட்ச இடங்களுக்குப் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது, ஆனால் அவை அதிகபட்ச இடங்களை வெல்வதில்லை, தோல்வியடைகின்றன. இதைப் பற்றி காங்கிரஸ் சிந்திக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.