எல்லைப்பிரச்சனையை தொடர்ந்து சீன நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த ரூ.5,000 கோடி மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளது மஹாராஷ்ட்ர அரசு.
இந்திய, சீன எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சீனாவுக்கு எதிரான கருத்துகள் இந்தியாவில் அதிக அளவில் எழுந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாகச் சீனப் பொருட்களைப் பயன்படுத்துவதை இந்தியர்கள் தவிர்க்கவேண்டும் எனவும், சீனப் பொருட்களின் இறக்குமதிக்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும் சமூகவலைத்தளங்களில் கருத்துகள் எழுந்து வருகின்றன. மேலும், சீனாவுக்கு வர்த்தக ரீதியில் மிகப்பெரிய பதிலடியை இந்தியா தரவேண்டும் எனவும் கருத்துகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், சீன நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த ரூ.5,000 கோடி மதிப்பிலான மூன்று வர்த்தக ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளது மஹாராஷ்ட்ர அரசு.
சமீபத்தில் மஹாராஷ்ட்ர மாநிலத்தில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில், கொரியா, சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் 12 தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவது தொடர்பான அடுத்தகட்ட பணிகள் அம்மாநிலத்தில் நடந்து வந்தன. இந்தச் சூழலில், எல்லைப்பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து சீன நிறுவனங்களுடனான மூன்று ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளது மஹாராஷ்ட்ர அரசு. ரூ.5,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தங்கள் நிறுத்திவைக்கப்படுவதாகவும், மற்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள், தொடர்ந்து நீடிக்கும் எனவும் அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.