Skip to main content

சந்திரயானா? பிரக்ஞானந்தாவா? முதலில் வெல்வது யார்  

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

chandrayan3;chess olympiad

 

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) என்ற செஸ் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24, 1924 இல் தொடங்கப்பட்டு தற்போது வரை இயங்கி வருகிறது. இந்த 10 ஆவது சதுரங்க உலகக் கோப்பை 2023, கடந்த ஜூலை 30 வெகு விமரிசையாகத் தொடங்கி அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்று வந்தது. இதில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது கிராண்ட் மாஸ்டர் (ஜிஎம்), ஆர். பிரக்ஞானந்தா, ஆகஸ்ட் 21 அன்று அரையிறுதி டை - பிரேக் ஆட்டத்தில், உலக தரவரிசையில் 3 ஆவது இடம் வகிக்கும் அமெரிக்காவின் ஜிஎம் ஃபேபியானோ கருவானாவை (2,782) தோற்கடித்து. FIDE 2023 செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

 

இந்த அரையிறுதி வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு பிரக்ஞானந்தா முன்னேறிய நிலையில் நேற்று இறுதிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. கார்ல்சன்- பிரக்ஞானந்தா மோதிய உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் முதல் சுற்று 35 நகர்த்தலுக்கு பிறகு டிராவில் முடிந்தது. இன்று இரண்டாம் சுற்று போட்டி தற்போது துவங்கியுள்ளது. நேற்று வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, இரண்டாவது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் ஆட்டத்தைத் தொடங்கியுள்ளார். இந்த இரண்டாம் சுற்று குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், 'கார்ல்சன் 2016 ஆம் ஆண்டு நடந்த போட்டியைப் போன்றே டிரா செய்யும் நோக்கில் காய்களை நகர்த்தி வருகிறார்' என தெரிவித்துள்ளார். 

 

அதேநேரம் இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3  நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவிற்கு மிக அருகில் சென்ற நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

 

இந்நிலையில் இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சந்திரயான் - 3 லேண்டரை நிலவில் தரையிறக்கத் திட்டமிட்டுள்ள உயரத்திற்கு லேண்டர் மாலை 05.44 மணிக்கு வந்தடையும். அதனைத் தொடர்ந்து சந்திரயான் 3 லேண்டரை நிலவில் தரையிறக்கும் நடவடிக்கை இன்று மாலை 05.44 மணிக்குத் தொடங்கும். தானியங்கி இறங்கும் முறைப்படி லேண்டர் வாகனம் படிப்படியாக நிலவை நோக்கி இறங்கத் தொடங்கும். குறிப்பிட்ட இடத்துக்கு லேண்டர் வந்தவுடன் தானியங்கி மூலம் நிலவில் தரையிறக்குவதற்கான கட்டளையை இஸ்ரோ விஞ்ஞானிகள் பிறப்பிக்க உள்ளனர்” என இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும் சந்திரயான் - 3 தரையிறங்கும் காட்சிகளை நேரலையில் பார்ப்பதற்காக இன்று மாலை 5.20 மணியிலிருந்து தேசிய தொலைக்காட்சியான டிடி நேஷனல் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படுகிறது. இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் சந்திரயான் - 3 விண்கலம் தரையிறங்கும் காட்சிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சந்திரயான் - 3, செஸ் உலக கோப்பை இறுதி போட்டியில் பிரக்ஞானந்தா என இரு விறுவிறுப்பு நிகழ்வுகள் இந்தியாவின் கவனத்தை சீட்டின் நுனியில் உட்கார வைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்