இன்றைய சூழலில் உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுவது உலகம் முழுவதுமான வெப்பநிலை உயர்வு. 35 டிகிரியை தொட்டாலே, இவ்வளவு வெயிலா? என சலித்துக்கொண்ட தமிழக மக்கள் கூட இன்று 40 டிகிரி செல்சியஸ் வெயிலில் தெருக்களில் உலா வருகின்றனர்.
இப்படி இன்றைய சூழலில் உலகம் முழுவதும் சராசரி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வெயிலில் இருந்து தப்பிக்க பெரும்பாலான வீடுகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவை ஏ.சி பொருத்தும் கலாச்சாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
என்னதான் வீட்டில் ஏ.சி வைத்து வெயிலில் இருந்து தப்பித்தாலும் வெளியில் செல்லும்போது அனைவரையும் வாட்டி வதைக்கத்தான் செய்கிறது வெயில். இதற்கான ஒரு தீர்வாக சோனி நிறுவனம் புதிய சட்டை ஏ.சி யை அறிமுகப்படுத்தியுள்ளது.
மொபைல் போன் அளவில், மிக குறைந்த எடையில் உள்ள இந்த ஏ.சி யை நமது சட்டையில் பொருத்திக்கொள்ள முடியும். சார்ஜ் செய்துகொள்ளும் பேட்டரி மூலம் செயல்படும் இந்த ஏ.சி-யானது ப்ளூடூத் வசதியும் கொண்டது. எனவே நமது கையில் உள்ள ஸ்மார்ட் போன் மூலம் இந்த ஏ.சி யை கட்டுப்படுத்த முடியும். வெயில் காலத்தில் உடலுக்குத் தேவையான குளிர்ச்சையையும் குளிர் காலத்தில் உடலின் தேவைக்கேற்ப வெப்பத்தையும் இந்த ஏசி சட்டை தருகிறது.
2 மணி நேரம் இதனை சார்ஜ் போட்டால் 180 நிமிடங்கள் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியான் என பெயரிடப்பட்டுள்ள இந்த பாக்கெட் ஏ.சி அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரியான் பாக்கெட் ஏசி-யின் விலை 5,947.63 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.