
உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் அம்மாநில பாஜகவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. கரோனாவை உத்தரபிரதேச அரசு கையாண்ட விதத்தில், பாஜக மத்திய தலைமை அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அரவிந்த் குமார் சர்மா என்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அம்மாநில பாஜகவிற்குள் நுழைந்துள்ளார். கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே மாநில சட்ட மேலவையில் உறுப்பினரானார்.
பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரிய நபராக கருதப்படும் அரவிந்த் குமார் சர்மாவை, மோடி மற்றும் அமித்ஷவே உத்தரபிரதேச அரசியலுக்குள் நுழைத்ததாகவும், யோகி ஆதித்யநாத்தின் கட்டுக்கடங்கா அதிகாரங்களை குறைக்கவே உத்தரபிரதேச அரசியலுக்குள் அவர் நுழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் யோகி ஆதித்யநாத், அரவிந்த் குமார் சர்மாவை தனது அமைச்சரவையில் சேர்க்க மறுத்துவிட்டதாகவும், இதனால் மோடியும் அமித்ஷாவும் யோகி ஆதித்யநாத் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
அண்மையில் பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்காதது பேசுபொருளானது. இந்தநிலையில் யோகி ஆதித்யநாத் இன்று இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். டெல்லி சென்றுள்ள யோகி ஆதித்யநாத், இன்று அமித்ஷாவையும், நாளை பிரதமர் மோடியையும் சந்தித்து பேசுவார் என தகவல்கள் கூறுகின்றன.