சட்டத்துறை அமைச்சகம் தபால் அலுவலகம் அல்ல என்று கோபமாக பேசியிருக்கிறார் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்! அவரின் கருத்துகள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
அகில பாரதிய அதிவக்த பரிஷத்தின் பேராசிரியர் மாதவமேனனின் நினைவு கருத்தரங்கம் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. இந்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘’கேரளாவிலுள்ள அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து பாலினத்தவரும் செல்லலாம், வழிபடலாம் என்கிற தீர்ப்பை கடுமையாக எதிர்த்தவர் பேராசிரியர் மாதவமேனன். காலகாலமாக உள்ள மக்களின் நம்பிக்கையில் நீதிமன்றங்கள் தலையிடும்போது எச்சரிகையாக இருக்க வேண்டும். அரசியலமைப்புக்கு எதிராக மக்களின் நம்பிக்கை இருந்தால் தலையிடலாம். மாறாக, பண்பாட்டுரீதியாக உள்ள மக்களின் நம்பிக்கையை கேள்விக் குறியாக்கும் வகையில் தீர்ப்பளிப்பது வழுக்கும் சாலைகளில் கால் வைப்பதற்கு சமமாகும்.
நீதிபதிகளை நியமிக்கும் ’தேசிய நீதிபதிகள் ஆணையம்’ என்கிற சட்ட மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்தது. இரு அவைகளிலும் அந்த மசோதா நிறைவேறியது. ஆனால், அதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை நாங்கள் மதிக்கின்றோம். விவாதிக்கவும் தயார். இன்னும் சொல்லப்போனால், நீதிபதிகளை நியமிக்கும் நீதிபதிகளின் கொலீஜியத்தை மதிக்கின்றோம். அதற்காக, சட்டத்துறை அமைச்சகம் தபால் அலுவலகம் போல செயல்படாது. சட்டத்தை இயற்றும் பங்களிப்பாளர்கள் நாங்கள் என்பதால் எங்களின் கடமையிலிருந்து விலகிவிட முடியாது‘’ என்றிருக்கிறார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். இவரின் இந்த கருத்துகள்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் மத்தியில் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.